| ||||
முதலமைச்சர் கனவில் இருக்கும் மூன்று அமைச்சர்களைக் கொல்வதற்கு ரவுடியை நியமிக்கிறார், ஓர் அமைச்சர் (கோட்டா சீனிவாசராவ்). அம்மூவரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். ஆனால்,ரவுடியை நியமித்த அமைச்சரே அதிர்ச்சியில் உறைகிறார் காரணம், அமைச்சர்களைக் கொன்றது அவர் நியமித்த ரவுடியல்ல; வேறு யாரோ. 'அந்த மர்ம கொலைக்காரனின் அடுத்த இலக்கு நாம் தானோ' என்பது கோட்டா சீனிவாசராவின் பீதி. இது ஒருபுறமிருக்க, கொலையாளியைத் தேடும் வேட்டையில் தீவிரமாக களமிறங்குகிறது காவல்துறை. கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு,௦ அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலிடம் ஒப்படைக்கப்படுகிறது. புலன் விசாரணை மேற்கொண்ட விஷாலுக்கோ அதிர்ச்சியோ அதிர்ச்சி. தாம் காக்கிச்சட்டை அணிய காரணமாக இருந்தவரும், 'சட்டம் தண்டிக்கணும், சாமிதான் கண்ணை குத்தணும்' என்று பாடம் நடத்தியவருமான காவல்துறை உயரதிகாரிதான் (உபேந்திரா) கொலையாளி. உபேந்திரா கொலைக்காரன் ஆனது ஏன்? அவரது நோக்கம் என்ன? குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே தொடங்கும் மோதலின் முடிவு என்ன? கதையும் களமும் சுவாரஸ்யம் தரக்கூடியது என்பது உண்மையே.ஆனால், திரைக்கதை சொதப்பல் என்பதால் 'சத்யம்' நிலைநாட்டப்படவில்லை என்பது பேருண்மை. விஷாலின் சிக்ஸ்-அப் தேகத்தாலும் வலு சேர்க்க முடியாதது பெரும் சோகம். காக்கிச்சட்டையில் சற்று ஒல்லியாகவே தெரிவதும் கம்பீரத்துக்கு தடை சேர்க்கிறது.எனினும், நடிப்பில் மிளிரவே செய்கிறார்.ஆனால்,முதுகில் கத்திக் குத்து வாங்கிய பிறகு சிற்றூரையே சிதறடிப்பது கொஞ்சம் ஓவர். கெஸ்ட் ரோல் என்றாலும் பேஸ்ட்டாக மனதில் ஒட்டிக் கொள்கிறார், உபேந்திரா. நயன்தாரா டி.வி. நிருபராம். ஆனால், அவரது நடை, உடை, பாவனைகள் எஃப் சேன்லை நினைவுபடுத்துகின்றன. நயன்தாராவிடம் உதை வாங்கும் ராம்ஜியின் நகைச்சுவை, மொத்தமும் வீண் என்றே சொல்ல வேண்டும். ஆக்ஷன் கதையில் தாய் - மகன் சென்டிமென்ட் வேறு. சுதா சந்திரனை சோபிக்கவைக்கவில்லை. 'என் அன்பே...', 'பால் பப்பாளி...' ஆகிய பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் முன்னணியில் இல்லை. படத்துக்கு ஆறுதல் அளிக்கும் அம்சங்களில் ஒன்று, ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு. க்ளைமாக்ஸ் கூட கொட்டாவி விட வைப்பது சத்யத்தின் உச்சகட்ட சோதனை. மொத்தத்தில்... விஷாலின் சத்யம் - வெல்லவில்லை! |
--
People Of Thambiluvil
No comments:
Post a Comment