சென்னை, ஆக. 2: தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் "தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா..?" |
என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அப்படி பேசியிருக்கக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்திலிருந்து தான் பாடம் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார். "குசேலன்" படத்தில் பணியாற்றிய 70 தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் சார்பில் ரூ.20 லட்சம், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும்போது... "குசேலன்' பட யூனிட்டில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நான் கூறியவுடன் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இனி நான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். ஒகேனக்கல் பிரச்னை தொடர்பாக நான் சொல்ல வேண்டிய கருத்துகளை என்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சொல்லிவிட்டார். இதற்கு மேல் நான் எதையும் பேச விரும்பவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒகேனக்கல் திட்டத்துக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "உதைக்கணும்' என்று பேசியதை கர்நாடகத்தில் உள்ள எல்லோரையும் உதைக்க வேண்டும் என புரிந்துகொண்டனர். "இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி யார் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அவர்களை' என்ற வார்த்தைகளைச் சேர்க்காமல் பேசியது பிரச்னையாகிவிட்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவமும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. இந்தச் சம்பவம் மூலம் நானும் பாடம் கற்றுக்கொண்டேன் என விளக்கமளித்தார். |
--
People Of Thambiluvil
No comments:
Post a Comment